ஆமதாபாத்: உலக கோப்பை பைனலில் தோல்வியடைந்த இந்திய வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி.
ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் உலக கோப்பை தொடரின் பைனல் நடந்தது. இதில் இந்திய அணி (240/10), ஆஸ்திரேலியாவிடம் (241/4) தோற்றது. ஆஸ்திரேலியா 6 வது முறையாக சாம்பியன் ஆனது. பைனலை நேரில் பார்த்தார் பிரதமர் மோடி.
போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்சிற்கு உலக கோப்பை வழங்கினார். பின் இந்திய வீரர்களின் ‘டிரசிங் ரூம்’ சென்றார்.
இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த முகமது ஷமியை அருகில் அழைத்து ஆறுதல் கூறினார். ஜடேஜாவிடம் ஆறுதலாக பேசினார். தனது இணையதள பக்கத்தில் மோடி வெளியிட்ட செய்தியில்,‘உலக கோப்பை தொடரில் இந்திய அணியினர் திறமையுடன், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. நீங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி, தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். எப்போதும் உங்களுடன் துணை நிற்போம்,’ என தெரிவித்துள்ளார்.
ஷமி கூறுகையில்,‘‘துரதிருஷ்டவசமாக பைனல், நம்முடைய நாளாக இருக்கவில்லை. ‘டிரசிங் ரூம்’ வந்து விளையாட்டு உணர்வை அதிகப்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி,’’என்றார்.
* ஜடேஜா கூறுகையில்,‘‘உலக கோப்பை தொடர் சிறப்பாக இருந்தது. கடைசியில் இப்படி முடிந்து விட்டதால், எங்களது இதயங்கள் நொறுங்கின. பிரதமர் மோடி நேரில் ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினார்,’’என்றார்.
அஷ்வின் உருக்கம்
அஷ்வின் வெளியிட்ட செய்தியில், ‘பைனலில் இந்திய அணி சரிந்ததால், எனது இருதயம் நொறுங்கி விட்டது,’ என தெரிவித்துள்ளார்.