துபாய்: உலக கோப்பை தொடரின் கனவு ‘லெவன்’ அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வானார். கோலி உள்ளிட்ட ஆறு இந்திய வீரர்கள் இடம் பெற்றனர்.
இந்தியாவில் உலக கோப்பை தொடர் நடந்தது. பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக கோப்பை கனவு அணி தேர்வு செய்யப்பட்டது. இதன் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வானார். இவர் 11 போட்டியில் 597 ரன் (சராசரி 54.27) விளாசினார். தவிர, இந்திய அணியை திறம்பட வழிநடத்தினார். லீக் சுற்றில் 9, அரையிறுதி என தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி தேடித் தந்தார். இந்தியா பைனலில் தோற்ற போதும், இவரது தலைமை பண்பை ஐ.சி.சி., அங்கீகரித்துள்ளது.
தவிர கோலி, ராகுல், ஜடேஜா, பும்ரா, ஷமி என 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் கோலி (765 ரன்) தொடர் நாயகன் ஆனார். சச்சினை (49) முந்தி, ஒருநாள் அரங்கில் 50 வது சதம் அடித்தார்.
விக்கெட் கீப்பர், துணைக் கேப்டன் ராகுல் 452 ரன் (75.33) எடுத்து, அதிக ரன் எடுத்த வீரர்களில் 8வது இடம் பிடித்தார். 7 போட்டியில் ஷமி 24 விக்கெட் வீழ்த்தி, ‘நம்பர்–1’ பவுலர் ஆனார். அதிக விக்கெட் சாய்த்தவர்களில் 4வது இடம் பெற்ற பும்ரா (20 விக்.,), ஜடேஜாவுக்கு (16 விக்.,) ‘உலக’ அணியில் இடம் கிடைத்தது.
‘ஆல் ரவுண்டர்’ வரிசையில் மேக்ஸ்வெலுடன் சேர்ந்து ஜடேஜாவும் (120 ரன், 16 விக்.,) இடம் பெற்றார்.
அணி விபரம் (பேட்டிங் வரிசையில்)
ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (594 ரன், தென். ஆப்.,), கோலி, மிட்செல் (552, நியூசி.,), ராகுல், மேக்ஸ்வெல் (400 ரன், 6 விக்., ஆஸி.,), ஜடேஜா, பும்ரா, ஷமி, ஜாம்பா (23 விக்.,), மதுஷங்கா (21, இலங்கை). 12வது வீரர் கோயட்சீ (20 விக்., தென் ஆப்ரிக்கா).
பாராட்டு
ஐ.சி.சி., வெளியிட்ட செய்தியில்,‘ உலக கோப்பை தொடரில் பும்ராவின் பந்துவீச்சு எக்கானமி ரேட் 4.06 ரன்னாக (சரசரியாக ஒரு ஓவருக்கு கொடுத்த ரன்) இருந்தது. இந்திய சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜடேஜா, ‘மிடில்’ ஓவர்களில் தொடர்ந்து சீரான விக்கெட் வேட்டையை வெளிப்படுத்தினார். உலக கோப்பை அரங்கில் ஷமி, ஒட்டுமொத்தமாக 55 விக்கெட் சாய்த்துள்ளது சிறப்பு,’ என தெரிவித்துள்ளது.
எதிர்காலம் எப்படி
உலக கோப்பை பைனலில் தோற்ற இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளுக்கு ரோகித் 36, அஷ்வின் 36, கோலி 34, ஜடேஜா 34, முகமது ஷமி 33, அணியில் நீடிக்கலாம்.
2024 (ஜூன்) ‘டி–20’ உலக கோப்பை தவிர, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி, 2026ல் ‘டி–20’ உலக கோப்பை (இந்தியா–இலங்கை), 2027 உலக கோப்பை என பல்வேறு தொடர்களுக்கான அணியை தயார் செய்ய இதுதான் சரியான நேரம். ஜெய்ஸ்வால் 21, சுப்மன் கில் 24, இஷான் கிஷான் 25, ருதுராஜ் 26, ரிஷாப் பன்ட் 26, ஸ்ரேயாஸ் 28, என இளம் வீரர்களை மாற்றாக கொண்டு வர வேண்டும்.
இந்திய அணி தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறியது:
அடுத்த மூன்று, நான்கு ஆண்டுக்கான அணியை திட்டமிட்டு கட்டமைக்க வேண்டும். ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கொடுத்து, பெரிய தொடர்களுக்கு மனதளவில் தயார் செய்ய வேண்டும். பவுலிங்கில் அஷ்வின், ஜடேஜாவுக்கு மாற்றாக, குல்தீப், அக்சர் படேல் தவிர பிஷ்னோய், சவுரப் குமார் என புதிய சுழற்பந்துவீச்சாளர்களை விரைவில் அடையாளம் காண வேண்டும்’’ என்றார்.