பாங்காக்: ஆசிய ‘பாரா’ வில்வித்தையில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.
தாய்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, சரிதா தேவி மோதினர். பாரா ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஷீத்தல் 143–138 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி 138–150 என சிங்கப்பூரின் நுார் சியாஹிதா அலிமிடம் தோல்வியடைந்தார்.
அடுத்து நடந்த 3வது இடத்துக்கான போட்டியில் சரிதா தேவி, ஜோதி மோதினர். அபாரமாக ஆடிய சரிதா 139–135 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஜப்பானின் யுயா ஓய் மோதினர். அபாரமாக ஆடிய ராகேஷ் 143–142 என்ற கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான தனிநபர் ‘ரீகர்வ்’ பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில், டோக்கியோ பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ஹர்விந்தர் சிங், 5–6 என ‘ஷூட் ஆப்’ முறையில் ஜப்பானின் டோமோஹிரோவிடம் வீழ்ந்தார். காலிறுதியில் இந்தியாவின் விவேக் சிகாரா 2–6 என சீனாவின் ஜுன் கன்னிடம் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான தனிநபர் ‘ரீகர்வ்’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா 0–6 என மங்கோலியாவின் செலங்கீயிடம் வீழ்ந்தார்.