டுரின்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 7வது முறையாக கோப்பை வென்று சாதித்தார்.
இத்தாலியின் டுரின் நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர் மோதினர். ஒரு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 7வது முறையாக (2008, 2012–2015, 2022–2023) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை (6 முறை, 2003–04, 06–07, 10–11) முந்தி முதலிடம் பிடித்தார் ஜோகோவிச்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் தனது 10வது பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச், பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் (23) வென்ற வீரர்கள் வரிசையில் ஸ்பெயினின் நடாலை (22) முந்தினார். யு.எஸ்., ஓபன் பைனலில் ஸ்பெயினின் அல்காரசை வீழ்த்திய இவர், 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார்.
400வது வாரம்: அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச், தரவரிசையில் 400 வாரம் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த முதல் டென்னிஸ் நட்சத்திரமானார். 2011, ஜூலை 4ல் முதன்முறையாக முதலிடம் பிடித்திருந்தார். ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப், 377 வாரம் முதலிடத்தில் இருந்தார். செக்குடியரசின் மார்டினா நவரத்திலோவா (332 வாரம்), அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (319), சுவிட்சர்லாந்தின் பெடரர் (310) ஆகியோர் 300 வாரங்களுக்கு மேல் முதலிடத்தில் இருந்தனர்.