புதுடில்லி: இந்திய மண்ணில் 13வது உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் அரங்கேறிய முக்கிய சாதனைகள்.
8
ஒரு உலக கோப்பை தொடரில் அதிக முறை 50க்கும் மேல் ரன் எடுத்த வீரர் ஆனார் இந்தியாவின் கோலி (8). இவர் 3 சதம், 5 அரைசதம் அடித்தார். சச்சின், சாகிப் (வங்கதேசம்) தலா 7 முறை இதுபோல அடித்து இருந்தனர்.
* ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் கோலி (765). 2003 தொடரில் சச்சின் 673 ரன் எடுத்ததே அதிகமாக இருந்தது.
50
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 117 ரன் விளாசிய கோலி, ஒருநாள் அரங்கில் 50வது சதம் (279 இன்னிங்ஸ்) அடித்த முதல் வீரர் ஆனார். இதற்கு முன் சச்சின் 452 இன்னிங்சில் 49 சதம் அடித்திருந்தார். உலக கோப்பை அரையிறுதியில் அதிக ரன் எடுத்த இந்தியர் ஆனார் கோலி (117). 2003ல் கங்குலி 111 ரன் எடுத்தார்.
54
‘உலக’ அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆனார் ரோகித். இவர் 28 போட்டியில் 54 சிக்சர் அடித்தார். வெஸ்ட் இண்டீசின் கெய்லை (49) பின்தள்ளினார்.
55
உலக கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் கைப்பற்றிய பவுலர் ஆனார் முகமது ஷமி. இவர் 17 போட்டியில் இந்த இலக்கை எட்டினார். இதுவரை 55 விக்கெட் சாய்த்துள்ளார். ஸ்டார்க் (19, ஆஸி.,), மலிங்கா (25, இலங்கை), பவுல்ட் (28, நியூசி.,) அடுத்தடுத்து உள்ளனர்.
* உலக கோப்பை அரங்கில் 4 முறை ஐந்து அல்லது அதற்கும் மேல் விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார் ஷமி. ஸ்டார்க் (ஆஸி.,) 3 முறை இதுபோல விக்கெட் வீழ்த்தினார்.
* உலக கோப்பை ‘நாக் அவுட்’ போட்டியில்(எதிர், நியூசி., அரையிறுதி) 7 விக்கெட் சாய்த்த முதல் பவுலர் ஆனார் ஷமி.
* குறைந்த பந்துகளில் 50 விக்கெட் சாய்த்த பவுலர்களில் ‘நம்பர்–1’ இடம் பெற்றார் ஷமி. இவர், 795 பந்துகளில் இந்த இலக்கை அடைந்தார். ஸ்டார்க் (941) அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டார்.
530
பேட்டிங் ஆர்டரில் 4 வது இடத்தில் களமிறங்கி, உலக கோப்பை அரங்கில் ஒரு தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் ஸ்ரேயாஸ். இவர் 11 போட்டியில் 530 ரன் எடுத்தார். முன்னதாக 2007ல் ஸ்காட் ஸ்டைரிஸ் (நியூசி.,) 499 ரன் எடுத்திருந்தார்.
* உலக கோப்பை ‘நாக் அவுட்’ போட்டிகளில்(எதிர், நியூசி., அரையிறுதி) குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் ஆனார் இந்தியாவின் ஸ்ரேயாஸ் (67 பந்து). 2007 பைனலில் கில்கிறிஸ்ட் (ஆஸி.,), 72 பந்தில் சதம் அடித்து இருந்தார்.
578
அறிமுக உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா. இவர் 10 போட்டியில் 578 ரன் எடுத்தார். இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் 532 ரன் எடுத்திருந்தார்.