ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஹெட். காயத்துடன் இருந்த போதும், உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். முதல் 5 போட்டியில் பங்கேற்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் களமிறங்கி 109 ரன் விளாசினார்.
அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 62 ரன் எடுத்து, 2 விக்கெட் சாய்த்து, பைனலுக்கு ஆஸ்திரேலியாவை கொண்டு வந்தார்.
* நேற்றைய பைனலில், ரோகித் அடித்த பந்தை அசத்தலாக ‘கேட்ச்’ செய்தார். பேட்டிங்கில் 137 ரன் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று தந்தார்.
* இதற்கு முன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் (2023) முதல் இன்னிங்சில் 163 ரன் குவித்து இந்தியா தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார் ஹெட். இந்த மூன்று போட்டியிலும் ‘ஆட்டநாயகன்’ ஹெட் தான்.
40 ஓவரில் 4 பவுண்டரி
நேற்று 10 வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்ரேயாஸ், பவுண்டரி அடித்தார். பின் இணைந்த கோலி, ராகுல் ஜோடி டெஸ்ட் போட்டி போல மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்த 96 பந்துகளில் பவுண்டரியே அடிக்கப்படவில்லை.
அடுத்து 26.2 வது பந்தில் தான் பவுண்டரி வந்தது. மீண்டும் 38.6 வது ஓவரில் தான் பவுண்டரி அடிக்கப்பட்டது. அதாவது கடைசி 40 ஓவரில் இந்தியா மொத்தமே 4 பவுண்டரி தான் அடித்தது.
பாலஸ்தீன ஆதரவாளர் கைது
கோலி பேட்டிங் செய்த போது, 11வது ஓவரை வீசினார் ஜாம்பா. 3வது பந்தை வீசியதும், திடீரென பாலஸ்தீன கொடியுடன், முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்தபடி ஒருவர் நேராக கோலியை நோக்கி ஓடிவந்து தோளில் கை வைத்து கட்டிப்பிடிக்க முயன்றார். உடனடியாக அங்கு வந்த பாதுகாவலர்கள், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இவர், சீனா–பிலிப்பைன்ஸ் வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியாவின் வெய்ன் ஜான்சன் எனத் தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர்.
விமானப்படை சாகசம்
பைனல் துவங்கும் முன் இந்திய விமானப் படையில் சூர்ய கிரண் பிரிவு சார்பில் சாகச நிகழ்ச்சி நடந்தது. 9 ‘ஹாக் எம்.கே–132 எஸ்.கே.ஏ.டி’ விமானங்கள், மைதானத்தில் மேல் வானத்தில் 10 நிமிடம் சாகசம் நிகழ்த்தின. இந்தியாவில் கிரிக்கெட் போட்டியின் போது இதுபோன்ற விமானப்படை நிகழ்வு நடப்பது இது தான் முதன் முறை.
நீலக் கடல் போல...
உலகின் பெரிய மோடி மைதானத்தில் உள்ள 1,32,000 இருக்கைகளும் நேற்று நிரம்பி வழிந்தன. பெரும்பாலான ரசிகர்கள் இந்திய அணியின் நீலநிற ஜெர்சியுடன் காணப்பட்டனர். இது நீலக் கடல் போல இருந்தது.
சச்சின் ஆறுதல்
நேற்று தோல்வி சோகத்தில் மைதானத்தில் நின்றிருந்த இந்திய வீரர்களை, ‘ஜாம்பவான்’ சச்சின் நேரில் சந்தித்தார். பயிற்சியாளர் டிராவிட், கோலி, சிராஜ் என அனைவரையும் முதுகில் தட்டி, ஆறுதல் சொன்னார்.
தொடரும் டிராவிட் சோகம்
இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட். கடந்த 2022 ‘டி–20’ அரையிறுதி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், நேற்றைய பைனல் என மூன்று முக்கிய போட்டியிலும் இவரது பயிற்சியில் இந்தியா தோற்றது. இவரது பதவிக் காலம் முடிந்த நிலையில், மீண்டும் பயிற்சியாளராக தொடர்வது சந்தேகமே.
ரூ. 33 கோடி
பைனலில் அசத்தி உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, ரூ. 33 கோடி பரிசு கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ. 16.5 கோடி கிடைத்தது.
137
உலக கோப்பை பைனலில் சதம் விளாசிய 7வது வீரரானார் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (137). இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு (102 ரன், எதிர்: ஆஸி., லார்ட்ஸ், 1975), விவியன் ரிச்சர்ட்ஸ் (138* ரன், எதிர்: இங்கிலாந்து, லார்ட்ஸ், 1979), இலங்கையின் அரவிந்த டி சில்வா (107* ரன், எதிர்: ஆஸி., லாகூர், 1996), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (140* ரன், எதிர்: இந்தியா, ஜோகனஸ்பர்க், 2003), கில்கிறிஸ்ட் (149 ரன், எதிர்: இலங்கை, பிரிட்ஜ்டவுன், 2007), இலங்கையின் ஜெயவர்தனா (103* ரன், எதிர்: இந்தியா, மும்பை, 2011) இப்படி சாதித்தனர்.* இதில் அரவிந்த டி சில்வா, டிராவிஸ் ஹெட் ‘சேஸ்’ செய்த போது சதம் விளாசினர்.
23
இந்தியாவின் பும்ராவை அவுட்டாக்கிய ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தை இலங்கையின் முரளிதரனுடன் (2007) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 23 விக்கெட் சாய்த்தனர். அடுத்த இரு இடங்களில் தலா 21 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் (2007), பாகிஸ்தானின் சாகித் அப்ரிதி (2011) உள்ளனர்.
டிராவிட் சாதனை முறியடிப்பு
ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் அடித்த பந்தை பிடித்த லோகேஷ் ராகுல், ஒரு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட இந்திய கீப்பரானார். இம்முறை 11 போட்டியில், 17 விக்கெட் (16 ‘கேட்ச்’, ஒரு ‘ஸ்டெம்பிங்’) விழ கைகொடுத்தார். இதற்கு முன் 2003ல் நடந்த தொடரில் இந்தியாவின் டிராவிட் 16 விக்கெட் வீழ்ச்சிக்கு உதவினார்.
99
இம்முறை இந்திய பவுலர்கள் 99 விக்கெட் கைப்பற்றினர். ஒரு உலக கோப்பை தொடரில், ஒரு அணியின் பவுலர்கள் 99 விக்கெட் சாய்த்தது இதுதான் முதன்முறை. இதற்கு முன் 2007ல் ஆஸ்திரேலிய பவுலர்கள் 97 விக்கெட் வீழ்த்தினர்.