இந்திய கேப்டன் ரோகித் கூறுகையில்,‘‘ கோலி, ராகுல் பேட்டிங் செய்தபோது எப்படியும் 280 ரன் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்து விக்கெட் சரிந்தது பின்னடைவு. கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருக்கலாம். பேட்டிங்கில் ஏமாற்றி விட்டோம். ஹெட், லபுசேன் சிறப்பாக ஆடினர். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் செயல்பாட்டை எண்ணி பெருமை கொள்கிறேன்,’’ என்றார்.
சிறந்த தருணம்
ஆஸ்திரேலியாவின் ஹெட் கூறுகையில்,‘‘ ரோகித் அடித்த பந்தை பிடிக்க கடினமாக இருந்தது. ‘கேட்ச்’ செய்த தருணத்தை நம்பவே முடியவில்லை. இந்த நாள் என் வாழ்வில் நிலைத்திருக்கும்,’’ என்றார்.
மறக்க முடியாது
ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில்,‘‘ நான் எதிர்பார்த்ததை விட ஆடுகளம் மந்தமாக இருந்தது. அபாரமான பவுலிங், அசத்தலான ‘கேட்ச்’ என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். துவக்கத்தில் மூன்று விக்கெட்டை இழந்ததும், இதயத்தில் படபடப்பு அதிகமானது. ஆனால், ஹெட், லபுசேன் இணைந்து வெற்றிக்கு கைகொடுத்தனர். உலக கோப்பை வென்ற தருணம் மறக்க முடியாதது,’’ என்றார்.
சொன்னதை செய்த கம்மின்ஸ்
பைனலுக்கு முன், ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்,’ஆமதாபாத்தில் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவது தான் இலக்கு,’ என தெரிவித்தார். இதை சொன்னபடி செய்து காட்டினார். பந்துவீச்சில் (2 விக்.,) அசத்திய இவர், ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை பெற்று தந்தார்.
தொடரும் ‘சேஸ்’ ராசி
உலக கோப்பை (ஒரு நாள் ) அரங்கில், 2011, 15, 19ல் ‘சேஸ்’ செய்த அணி வென்றது. ‘டி–20’யிலும் கடந்த 4 முறை (2014, 16, 21, 22) 2வது பேட்டிங் செய்த அணியே வாகை சூடியது. இந்த ராசி நேற்றும் தொடர்ந்தது. டாஸ் வென்றது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது. ‘சேஸ்’ செய்து, உலக கோப்பையை தட்டிச்சென்றது.