உலக கோப்பை பைனல் போன்ற போட்டியில் ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தால், எவ்வித நெருக்கடியும் இன்றி அதிக ரன் சேர்க்கலாம் என்பர். ஆனால் ‘டாஸ்’ வென்ற கம்மின்ஸ், பீல்டிங் தேர்வு செய்ய, இந்தியா பக்கம் அதிர்ஷ்டம் என ரசிகர்கள் நம்பினர்.
* ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் இருந்தே பவுலிங், பீல்டிங்கில் மிரட்ட, சுப்மன் 4 ரன்னில் அவுட்டானார்.
* ரோகித் எப்போதும் போல வேகமாக ரன் சேர்த்து நம்பிக்கை தந்தார். இவர் 47 ரன்னில் அவுட்டானதும், போட்டி ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. இதன் பின் எந்த ஒரு கட்டத்திலும் இந்தியா எழுந்திருக்கவே முடியவில்லை.
* ஸ்ரேயாஸ், வந்த வேகத்தில் 3 வது பந்தில் வீழ்ந்தார்.
* கோலி, ராகுல் இணைந்து டெஸ்ட் போட்டி போல, மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர்.
* முதல் 50 ரன்னை, 30 பந்தில் எடுத்தது இந்தியா. அடுத்த 50 ரன் எடுக்க, 76 பந்து தேவைப்பட்டன. மீண்டும் 81 பந்துகளை எதிர்கொண்ட பிறகு தான் அடுத்த 50 ரன் கிடைத்தன.
* 10 வது ஓவருக்குப் பின், அடுத்து 26.2 வது பந்தில் தான் பவுண்டரி அடிக்கப்பட்டது. மீண்டும் 38.6 வது ஓவரில் தான் பவுண்டரி அடிக்கப்பட்டது. அதாவது 29 ஓவர் இடைவெளியில் (10 முதல் 39) 2 பவுண்டரி தான் அடிக்கப்பட்டன.
* ஐந்தாவது பவுலர் இல்லாமல் மேக்ஸ்வெல், ஹெட், மார்ஷை வைத்து சமாளித்தது ஆஸ்திரேலியா. மாறாக, இவர்களது பந்துகளிலும் இந்திய வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறியது வினோதமாக இருந்தது.
* பின் வரிசையில் ஜடேஜா, சூர்யகுமாரும் சொதப்பினர்.
* இத்தொடர் முழுவதும் ரன் மழை பொழிந்த இந்தியா, பைனலில் கடைசி 40 ஓவரில் 4 பவுண்டரி மட்டும் அடித்தது, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
* எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 10 ஓவரில் 60/3 ரன் எடுத்தது.
* இந்திய பவுலர்கள் சிராஜ், குல்தீப் சரியான ‘லைன்’, ‘லென்த்தில்’ பந்து வீச தவறினர்.
* ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா போல ஆறாவது பவுலர் இல்லாமல் இந்தியா திணறியது.
* விக்கெட் கீப்பர் ராகுல், அவ்வப்போது பந்துகளை தவற விட, ஆஸ்திரேலிய அணிக்கு ரன் சேர்ப்பது எளிதாக இருந்தது.
* நான்காவது விக்கெட்டுக்கு ஹெட், லபுசேன் இணைந்து 192 ரன் சேர்க்க, இந்திய ரசிகர்களின் உலக கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை கலைந்தது.