டுரின்: ஏ.டி.பி., பைனல்ஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டென் ஜோடி முன்னேறியது.
இத்தாலியின் டுரின் நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு தரவரிசையில் ‘டாப்–8’ இடத்தில் உள்ள வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இரட்டையர் பிரிவு ‘ரெட்’ பிரிவு போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி, நெதர்லாந்தின் வெஸ்லே கூல்ஹோப் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய இந்தியா – ஆஸ்திரேலிய ஜோடி, ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 7–6 என தன்வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 22 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய போபண்ணா, எப்டென் ஜோடி 6–4, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா, ஜேசன் குப்லர் ஜோடியை வென்ற இந்தியா–ஆஸ்திரேலிய ஜோடி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், அர்ஜென்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.