குவைத் சிட்டி: உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான 2வது சுற்றில் இந்திய அணி 1–0 என குவைத்தை வென்றது.
கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் 2026ல் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று, 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
இரண்டாவது சுற்றில் 36 அணிகள், 9 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் கத்தார், ஆப்கானிஸ்தான், குவைத் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.
குவைத் சிட்டியில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, குவைத் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 75வது நிமிடத்தில் லல்லியன்ஜுவாலா சாங்தே ‘பாஸ்’ செய்த பந்தில் இந்தியாவின் மன்விர் சிங் கோல் அடித்தார். இதற்கு கடைசி நிமிடம் வரை போராடிய குவைத் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் கத்தார் அணியை (நவ. 21, புவனேஸ்வர், ஒடிசா) சந்திக்கிறது.
தோகாவில் நடந்த மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கத்தார், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த கத்தார் அணி 8–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கத்தார் வீரர் அல்மோஸ் அலி 4 கோல் (15, 26, 33, 45+3வது நிமிடம்) அடித்தார்.