டுரின்: செர்பியாவின் ஜோகோவிச், ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில், 8வது முறையாக ‘நம்பர்–1’ இடத்தை உறுதி செய்தார்.
இத்தாலியில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. தரவரிசையில் ‘டாப்–8’ வரிசையில் உள்ள வீரர்கள் இரு பிரிவுகளாக விளையாடுகின்றனர். ‘கிரீன்’ பிரிவு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் மோதினர். இதில் ஜோகோவிச் 7–6, 6–7, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 8வது முறையாக ‘நம்பர்–1’ இடத்தை உறுதி செய்தார் ஜோகோவிச். இதற்கு முன் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் 6 முறை, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் தலா 5 முறை ஆண்டு இறுதியில் வெளியான தரவரிசையில் ‘நம்பர்–1’ இடம் பிடித்திருந்தனர்.
இத்தொடருக்கு பின், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 400 வாரம் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த வீரர் என்ற புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார் ஜோகோவிச். இதுவரை 399 வாரம் முதலிடம் வகித்துள்ளார். இவரை அடுத்து, சுவிட்சர்லாந்தின் பெடரர் 310 வாரம் ‘நம்பர்–1’ வீரராக இருந்துள்ளார்.