ஹெல்சின்கி: பின்லாந்தில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் பைனலில் இந்தியாவின் ஜீவன், சுந்தர்–ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி ஜோடி மோதவுள்ளது.
பின்லாந்தின் ஹெல்சின்கி பகுதியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் ஜோடி, அமெரிக்காவின் மேக்சிம், பின்லாந்தின் விர்டானன் ஜோடியை எதிர் கொண்டது. துவக்கம் முதலே அசத்திய ஜீவன் ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி ஜோடி 6–7, 6–4, 10–8 என பிரிட்டனின் லுாக், துனிசியாவின் சிகந்தர் ஜோடியை போராடி வீழ்த்தியது. இதனையடுத்து பைனலில் இரு இந்திய ஜோடி மோதவுள்ளன.
சுமித் முன்னேற்றம்
ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், பின்லாந்தின் எமில் மோதினர். முதல் செட்டை சுமித் 6–3 என வசப்படுத்தினார். அடுத்த செட்டில் இவர் 3–1 என முன்னிலையில் இருந்தபோது, எமில் விலகுவதாக அறிவித்தார். சுமித் 6–3, 3–1 என வெற்றி பெற்றார்.