டுரின்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் இன்று துவங்குகிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ செர்பியாவின் ஜோகோவிச் அசத்தும் பட்சத்தில், 7வது பட்டத்தை கைப்பற்றலாம்.
இத்தாலியின் டுரின் நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இன்று முதல் நவ. 19 வரை நடக்கிறது. இதில் ஏ.டி.பி., ஒற்றையர் தரவரிசையில் ‘டாப்–8’ இடத்தில் உள்ள வீரர்கள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதியில் மோதுவர். பைனல், நவ. 19ல் நடக்கிறது.
இம்முறை ‘கிரீன் குரூப்பில்’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர், கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், ‘ரெட் குரூப்பில்’ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், ரப்லேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடம் பெற்றுள்ளனர்.
புதிய சாதனை
இத்தொடரில் அதிக பட்டம் வென்றுள்ள வீரர்கள் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (2003–04, 06–07, 10–11), ஜோகோவிச் (2008, 2012–15, 22) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இருவரும் தலா 6 முறை கோப்பை வென்றுள்ளனர்.
அதிக கிராண்ட்ஸ்லாம் (24 முறை), அதிக மாஸ்டர்ஸ் (40 முறை) பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரில் அதிக முறை (7) கோப்பை வென்ற வீரராகலாம்.