புதுடில்லி: ‘‘கால்பந்து அரங்கில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை,’’ என சுனில் செத்ரி தெரிவித்தார்.
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி 39. கடந்த 2005ல் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன இவர் இதுவரை 143 போட்டியில் பங்கேற்று, 93 கோல் அடித்துள்ளார். தற்போது விளையாடிக் கொண்டிக்கும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் போர்ச்சுகலின் ரொனால்டோ (127), அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு (106) அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தற்போது, 2026ல் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் (அமெரிக்கா, கனடா, மெக்சிகோ) ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்றின், 2வது சுற்றில் (நவ. 16) பங்கேற்க உள்ளார்.
மொத்தம் 36 அணிகள், 9 பிரிவுகளாக விளையாடுகின்றன. இதில் இருந்து 18 அணிகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை இந்திய அணி சிறப்பாக செயல்பட்ட தகுதி பெற்றால், சுனில் செத்ரிக்கு 2026ல் 42 வயதாகும். அப்போது உலக கோப்பை தொடரில் பங்கேற்பது உறுதியில்லை.
இதுகுறித்து அவர் கூறியது: எனது கால்பந்து வாழ்க்கை எப்போது முடியும் எனத் தெரியாது. இப்போதைக்கு இந்திய அணியுடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கிடைத்த ‘போனஸ்’ காலம். இதில் மகிழ்ச்சியாக செயல்பட விரும்புகிறேன்.
ஏனெனில் எனக்கு தற்போது 39 வயதாகிறது. எனக்கென நீண்ட நாள் திட்டம் எதுவும் இல்லை. அடுத்த மூன்று மாதம், பின் அதற்கடுத்த மூன்று மாதம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதன் பிறகு எப்படி செல்கிறது என பிறகு பார்க்கலாம்.
மற்றபடி இன்னும் எத்தனை நாள், மாதம், ஆண்டுகள் எனத் தெரியவில்லை. என்று என்னால் விளையாட முடியாமல் போகிறதோ, அன்று ஓய்வுபெற்று விடுவேன். இவ்வாறு சுனில் செத்ரி கூறினார்.