மேல் அடோல்: ஏ.எப்.சி., கால்பந்தில் இந்தியாவின் ஒடிசா அணி 3–2 என, மாலத்தீவின் மஜியா அணியை வீழ்த்தியது.
ஆசிய கிளப் அணிகளுக்கான ஏ.எப்.சி., கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது. 36 அணிகள் மோதுகின்றன. இதில் 11 அணிகள் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். ‘டி’ பிரிவில் இந்தியாவின் ஒடிசா அணி, மோகன் பகான் அணிகள் உள்ளன. இதில் ஒடிசா அணி, நேற்று மாலத்தீவின் மஜியா அணியை சந்தித்தது.
முதல் பாதியில் மஜியா அணி 2–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சுதாரித்த ஒடிசா அணிக்கு மோர்டடா பால், 65 வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். 72வது நிமிடம் மவுரிசியா ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2–2 என சமன் ஆனது. தொடர்ந்து அசத்திய ஒடிசா அணியின் ராய் கிருஷ்ணா, 85வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
முடிவில் ஒடிசா அணி 3–2 என்ற கோல் கணக்கில் கலக்கல் வெற்றி பெற்றது. ‘டி’ பிரிவில் 4 போட்டியில் தலா 2 வெற்றி, தோல்வியுடன் 6 புள்ளி பெற்று, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் மோகன் பகான் (7 புள்ளி) உள்ளது.