மொகாலி: சையது முஷ்தாக் அலி தொடரில் பஞ்சாப் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. பைனலில் 20 ரன் வித்தியாசத்தில் பரோடாவை வென்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சையது முஷ்தாக் அலி டிராபி (‘டி–20’) 16வது சீசன் நடந்தது. மொகாலியில் நடந்த பைனலில் பஞ்சாப், பரோடா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பரோடா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
அன்மோல்பிரீத் அபாரம்: பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா (0), பிரப்சிம்ரன் சிங் (9) ஏமாற்றினர். கேப்டன் மன்தீப் சிங் (32) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த அன்மோல்பிரீத் சிங், நேஹல் வதேரா ஜோடி பரோடா பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. லுக்மன் மேரிவாலா வீசிய 17வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த அன்மோல்பிரீத், 58 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் அசத்திய நேஹல், 23 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்த போது அன்மோல்பிரீத் (113 ரன், 61 பந்து, 6 சிக்சர், 10 பவுண்டரி) ‘ரன்–அவுட்’ ஆனார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 223 ரன் குவித்தது. நேஹல் (61 ரன், 27 பந்து, 4 சிக்சர், 6 பவுண்டரி), சன்விர் சிங் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
அர்ஷ்தீப் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய பரோடா அணிக்கு அபிமன்யுசிங் ராஜ்புட் (61), நினத் ராத்வா (47), கேப்டன் குர்னால் பாண்ட்யா (45) கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற பரோடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 203 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.