புதுடில்லி: உலக கோப்பை கால்பந்து (2026) தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய உத்தேச அணியில் சுனில் செத்ரி, குர்பிரீத் சிங் சாந்து உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்து 2026ல் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்துகின்றன. இதற்கான தகுதிச் சுற்று பல்வேறு கண்டங்களாக நடக்கிறது. ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்றின், 2வது சுற்றுப் போட்டிகள் நவ. 16ல் துவங்குகின்றன. மொத்தம் 36 அணிகள், 9 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணி ‘ஏ’ பிரிவில் ஆப்கானிஸ்தான், கத்தார், குவைத் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி, தனது முதலிரண்டு போட்டியில் குவைத் (நவ. 16, இடம்: குவைத்), கத்தார் (நவ. 21, இடம்: புவனேஸ்வர், ஒடிசா) அணிகளை சந்திக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக 28 பேர் கொண்ட உத்தேச அணியை இந்திய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வெளியிட்டார்.
இதில் கேப்டன் சுனில் செத்ரி, கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, அம்ரிந்தர் சிங், சந்தேஷ் ஜிங்கன், அனிருத் தபா, மன்விர் சிங், விக்ரம் பிரதாப் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் நவ. 8ல் துபாய் சென்று பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.