உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில் மந்தமான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 1975ல் (ஜூன் 7) நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணி 60 ஓவரில், 334/4 ரன் குவித்தது. கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கவாஸ்கர் மந்தமான துவக்கம் தந்தார். 176 பந்துகளை ‘விழுங்கிய’ இவர், 36 ரன் (ஒரு பவுண்டரி) மட்டுமே எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதனால் 60 ஓவரில், 132/3 ரன் மட்டும் எடுத்த இந்திய அணி 202 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது.
கவாஸ்கர் ஏன் இப்படி விளையாடினார் என்று யாருக்குமே புரியவில்லை. போட்டி முடிந்து ‘பெவிலியன்’ திரும்பிய இவரிடம், ‘‘ஏன் இப்படி விளையாடினீர்கள்’’, என, பலரும் கேட்டனர். அதற்கு, ‘‘இங்கிலாந்து பவுலர்களின் திறமையை சோதித்துப் பார்த்தேன். இது, அடுத்து துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சியாக இருக்கும்,’’ என, ‘கூலாக’ பதில் சொன்னாராம்.
தெரியுமா
உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதலிடத்தில் உள்ளார். இவர், 1999ல் டான்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 183 ரன் (7 சிக்சர், 17 பவுண்டரி) குவித்தார். இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு சேவக்கிற்கு கிடைத்தது. ஆனால், 9 ரன்னில் கோட்டைவிட்டார். மிர்புரில் 2011ல் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அசத்திய சேவக், 140 பந்தில், 175 ரன் (5 சிக்சர், 14 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.