பெல்கிரேடு: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அபிமன்யு தோல்வியடைந்தார்.
செர்பியாவின் பெல்கிரேடில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 30 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியுடன் பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு ‘பிரீஸ்டைல்’ போட்டியில் இந்திய வீரர் அபிமன்யு, காலிறுதியில் அமெரிக்காவின் ஆலன் ரெதர்போர்டிடம் தோல்வியடைந்தார்.
ஆலன் பைனலுக்கு முன்னேறியதால், அபிமன்யு வெண்கலப் பதக்கத்துக்கான ‘ரெப்பிசேஜ்’ பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் முதல் போட்டியில் அபிமன்யு, தஜிகிஸ்தானின் முஸ்தபாவை சந்தித்தார். இதில் அபிமன்யு 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆர்மேனியாவின் ஆர்மனை எதிர்கொண்டார். இதில் 1–12 என வீழ்ந்து வெண்கலத்தை நழுவவிட்டார்.
79 கிலோ பிரிவில் இந்தியாவின் சச்சின் மோர், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றின் முதல் போட்டியில் சச்சின், ரஷ்யாவின் அகமது மோதினர். இதில் சச்சின் 6–16 என வீழ்ந்தார். தவிர. இந்தியாவின் சாஹில், அஞ்சலி, அனுஜ் குமார், நேகா தோல்வியடைந்தனர்.