ஜோகனஸ்பர்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், 122 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி 3–2 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
தென் ஆப்ரிக்கா சென்ற ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2–2 என சமநிலையில் இருந்தது. நேற்று, 5வது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா (0) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (27), வான் டெர் துசென் (30) ஆறுதல் தந்தனர். மார்க்ரம் (93), டேவிட் மில்லர் (63), மார்கோ ஜான்சென் (47) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 319 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (10), இங்லிஸ் (0), அலெக்ஸ் கேரி (2) ஏமாற்றினர். கேப்டன் மிட்சல் மார்ஷ் (71), லபுசேன் (44) ஓரளவு கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவரில் 193 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் மார்கோ ஜான்சென் 5, கேஷவ் மஹாராஜ் 4 விக்கெட் சாய்த்தனர்.
ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் மார்கோ ஜான்சென், தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் வென்றனர்.