உலக கோப்பை தொடரின் (2007) கவர்ச்சிகரமான வீரராக தேர்வானார் இலங்கையின் லசித் மலிங்கா. வித்தியாசமான தலை அலங்காரத்துடன், வித்தியாசமான இவரது வேகப்பந்துவீச்சு, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக இருக்கும். இவரது ‘யார்க்கர்’ பந்து புகழ் பெற்றவை. இத்தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘சூப்பர்–8’ போட்டியில் அசத்திய மலிங்கா, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்து வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டத்தின் 45வது ஓவரின் கடைசி 2 பந்தில் போலக் (13), ஆன்ட்ரூ ஹாலை (0) அவுட்டாக்கிய இவர், 47வது ஓவரின் முதலிரண்டு பந்தில் காலிஸ் (86), நிடினியை (0) வெளியேற்றினார். இதனையடுத்து உலக கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக 4 விக்கெட் கைப்பற்றிய பவுலரானார். தொடர்ந்து அசத்திய இவர், 2011ல் கென்யாவுக்கு எதிரான போட்டியிலும் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
தெரியுமா
உலக கோப்பை தொடரில், ஒரு போட்டியில் அதிக ‘மெய்டன்’ ஓவர் வீசிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் பிஷன் சிங் பேடி முதலிடத்தில் உள்ளார். 1975ல் கிழக்கு ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 8 ‘மெய்டன்’ ஓவர் வீசினார். மொத்தம் 12 ஓவரில், 8 ‘மெய்டன்’ உட்பட 6 ரன் மட்டும் வழங்கி, ஒரு விக்கெட் கைப்பற்றினார்.