கொழும்பு: ஆசிய கோப்பைபைனலில் அசத்திய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்றது. ‘வேகத்தில்’ மிரட்டிய சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தினார். இலங்கை அணி 50 ரன்னில் சுருண்டு ஏமாற்றம் அளித்தது.
ஆசிய கோப்பைகிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இலங்கையில் நடந்தது.நேற்றுகொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்தபைனலில் இந்தியா,இலங்கைஅணிகள் மோதின. காயமடைந்த அக்சர் படேலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் தீக் ஷனாவுக்கு பதில் ஹேமந்தா இடம் பெற்றார்.
‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் ஷனகா, ‘பேட்டிங்’ தேர்வு செய்து அதிர்ச்சி கொடுத்தார். மழை காரணமாக, ஆட்டம் 40 நிமிடம் தாமதமாக துவங்கியது.
சீறிய சிராஜ்
இந்திய ‘வேகத்தில்’ இலங்கை அணி அதிர்ந்தது. பும்ரா வீசிய முதல் ஓவரில் குசால் பெரேரா(0) அவுட்டானார். இதற்கு பின் முகமது சிராஜ் மிரட்டினார். துல்லியமான அளவில் வீசிய இவரது ‘அவுட்சிங்கர்’களில் இலங்கை பேட்டர்கள் ‘சரண்டர்’ ஆகினர்.
போட்டியின் 4வது ஓவரை வீசிய சிராஜ் திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்தில் ஜடேஜாவின் கலக்கல் கேட்ச்சில் நிசங்கா(2) வெளியேறினார். 3வது பந்தில் சமரவிக்ரமா(0) எல்.பி.டபிள்யு., ஆனார். 4வது பந்தில் சரியான ‘புட்வொர்க்’ இல்லாமல் ஆடிய அசலங்கா(0) அவுட்டானார். 5வது பந்தில் ‘ஹாட்ரிக்’ காத்திருந்தது. ஆனால், தனஞ்ஜெயா பவுண்டரி அடிக்க, வாய்ப்பு நழுவியது.
இதனை எல்லை வரை ஓடி தடுக்க முயன்ற சிராஜின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது. 6வது பந்தில் தனஞ்ஜெயா(4) அவுட்டாக, 4வது ஓவரில் சிராஜ் 4 ரன் மட்டும் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இலங்கை அணி 4 ஓவரில் 12 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
மீண்டும் பந்துவீச வந்த சிராஜ் இம்முறை ஷனகாவை(0) போல்டாக்கி, தனது 5வது விக்கெட்டை பெற்றார். தொடர்ந்து குசால் மெண்டிசையும்(17) பெவிலியனுக்கு அனுப்பிய இவர், 6வது விக்கெட்டை கைப்பற்றினார்.
கடைசி கட்டத்தில் பட்டையை கிளப்பினார் ஹர்திக் பாண்ட்யா. இவரது பந்துவீச்சில் வெல்லாலகே(8), மதுஷன்(1) உள்ளிட்ட கடைசி 3 விக்கெட்டுகள் சரிந்தன. இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்னுக்கு சுருண்டது. ஹேமந்தா(13) அவுட்டாகாமல் இருந்தார்.
சுலப வெற்றி
போகிற போக்கில் எட்டும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சுப்மன் கில், இஷான் கிஷான் நல்ல துவக்கம் தந்தனர். பதிரனா ஓவரில் இஷான் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார். மதுஷன் ஓவரில் சுப்மன் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார்.
இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. சுப்மன்(27), இஷான்(23) அவுட்டாகாமல் இருந்தனர்.
8
ஆசிய கோப்பை அரங்கில் இந்திய அணி 8வது முறையாக (1984, 1988, 1990, 1995, 2010, 2016*, 2018, 2023) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் அதிக முறை ஆசிய கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் இலங்கை (1986, 1997, 2004, 2008, 2014, 2022*), பாகிஸ்தான் (2000, 2012) அணிகள் உள்ளன.
* 2016, 2022ல் ‘டி–20’ போட்டியாக நடத்தப்பட்டது.
ஐந்து ஆண்டுக்கு பின்...
இந்திய அணி 2018ல் வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை வென்றது. அதன்பின் 5 ஆண்டுகளாக, மிகப் பெரிய தொடர்களில் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. 2019 (50 ஓவர்), 2022 (‘டி–20’) உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்றது. 2021 (எதிர்: நியூசி.,), 2023 (எதிர்: ஆஸி.,) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வீழ்ந்தது. 2022 ஆசிய கோப்பை பைனலுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றியது. நேற்று இலங்கையை வீழ்த்தியதன்மூலம் இந்தியாவின் 5 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது.
சிறந்த பந்துவீச்சு
இந்தியாவின் முகமது சிராஜ், 7 ஓவரில், 21 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில், தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், திருவனந்தபுரத்தில் நடந்த (2023, ஜன. 15) இலங்கைக்கு எதிரான போட்டியில் 10 ஓவரில், 32 ரன் வழங்கி, 4 விக்கெட் வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.
* ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலரானார் சிராஜ். இதற்கு முன் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (10 ஓவரில், 26 ரன், 6 விக்கெட், 1990) இருந்தார்.
* ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார் சிராஜ். முதல் மூன்று இடங்களில் ஸ்டூவர்ட் பின்னி (6/4 விக்கெட், எதிர்: வங்கதேசம், 2014), கும்ளே (6/12, எதிர்: தெ.ஆ., 1993), பும்ரா (6/19, எதிர்: இங்கிலாந்து, 2022) உள்ளனர். தவிர, ஒருநாள் அரங்கில் ஒரு போட்டியில் 6 விக்கெட் வீழ்த்திய 11வது இந்திய பவுலரானார்.
முதல் இந்திய பவுலர்
* சிராஜ் வீசிய 4வது ஓவரில் இலங்கையின் நிசங்கா, சமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்செயா அவுட்டாகினர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில், ஒரு ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியர், 4வது சர்வதேச பவுலரானார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (எதிர்: வங்கம், 2003), பாகிஸ்தானின் முகமது சமி (எதிர்: நியூசி., 2003), இங்கிலாந்தின் அடில் ரஷித் (எதிர்: வெ.இண்டீஸ், 2019) இப்படி சாதித்திருந்தனர்.
* மிகப் பெரிய தொடரின் பைனலில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர், 2வது இந்திய பவுலரானார் சிராஜ். ஏற்கனவே சுழல் வீரர் அனில் கும்ளே (6 விக்கெட், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 1993) இப்படி சாதித்திருந்தார்.
50 விக்கெட்
* ஒருநாள் அரங்கில் நேற்று 50வது விக்கெட்டை பெற்றார் சிராஜ். இதுவரை 53 விக்கெட் சாய்த்துள்ள சிராஜ், ஒருநாள் போட்டியில் அதிவேகமாக (29 போட்டி) 50 விக்கெட் கைப்பற்றிய 4வது இந்திய பவுலரானார். தவிர, குறைந்த பந்தில் 50 விக்கெட் சாய்த்த 2வது பவுலரானார் சிராஜ் (1002 பந்து). முதலிடத்தில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (847 பந்து) உள்ளார்.
* சிராஜ், தனது 16வது பந்தில் 5வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் குறைந்தபந்தில் 5வது விக்கெட்டை கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை இலங்கையின் சமிந்தா வாசுடன் (16 பந்து, எதிர்: வங்கதேசம், 2003) பகிர்ந்து கொண்டார்.
மூன்றாவது கேப்டன்
2018ல் ஆசிய கோப்பை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நேற்று மீண்டும் சாதித்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு இரண்டு முறை ஆசிய கோப்பை பெற்றுத்தந்த மூன்றாவது கேப்டன் ஆனார் ரோகித். ஏற்கனவே முகமது அசார் (1991, 1995) தோனி (2010, 2016) இப்படி சாதித்திருந்தனர்.
250
நேற்று, ரோகித் சர்மா தனது 250வது ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 9வது இந்திய வீரரானார். ஏற்கனவே சச்சின் (463 போட்டி), தோனி (347), டிராவிட் (340), அசார் (334), கங்குலி (308), யுவராஜ் (301), கோஹ்லி (280), கும்ளே (269) இந்த இலக்கை கடந்தனர்.
10
ஒருநாள் தொடரின் பைனலில் இரண்டு முறை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணியானது இந்தியா. இதற்கு முன், 1998ல் சார்ஜாவில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பைனலில் இப்படி வெற்றி பெற்றிருந்தது.
263
இப்போட்டியில் 263 பந்து மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் போட்டியில், தனது சிறந்த வெற்றியை (அதிக பந்து மீதம்) பதிவு செய்தது. இதற்கு முன், 2001ல் புளோயம்போன்டைனில் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில் 231 பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றிருந்தது.
* அதிக பந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் 6வது இடம் பிடித்தது இந்தியா. முதலிடத்தில் இங்கிலாந்து (277 பந்து மீதம், எதிர்: கனடா, 1979) உள்ளது.
2வது குறைந்த ஸ்கோர்
ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, தனது 2வது மோசமான ஸ்கோரை பெற்றது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2012ல் 43 ரன்னுக்கு சுருண்டது இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.
* ஒருநாள் அரங்கில் மோசமான ஸ்கோரை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 10வது இடம் பிடித்தது. முதலிடத்தை ஜிம்பாப்வே (எதிர்: இலங்கை, 2004), அமெரிக்கா (எதிர்: நேபாளம், 2020) அணிகள் (தலா 35 ரன்) பகிர்ந்து கொண்டன.
* ஆசிய கோப்பையில் குறைந்த ரன்னில் சுருண்ட அணிகளுக்கான வரிசையில் முதலிடம் பிடித்தது இலங்கை. இதற்கு முன், தாகாவில் நடந்த (2000) பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 87 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.
விருதுகள்
* பைனலில், 6 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சிறந்த வீரருக்கான ஆட்ட நாயகன் விருது வென்றார்.
* இத்தொடரில் 9 விக்கெட் சாய்த்த இந்திய சுழல் வீரர் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
302
இத்தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களுக்கான வரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இவர், 6 இன்னிங்சில், 302 ரன் எடுத்தார். அடுத்த இரு இடங்களை இலங்கையின் குசால் மெண்டிஸ் (270 ரன்), சமரவிக்ரமா (215) கைப்பற்றினர்.
11
அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களுக்கான பட்டியலில் இலங்கையின் மதீஷா பதிரானா முதலிடம் பிடித்தார். இவர், 6 இன்னிங்சில், 11 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை இந்தியாவின் சிராஜ் (10 விக்கெட்), இலங்கையின் வெல்லாலகே (10) தட்டிச் சென்றனர்.
116
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஆசிய கோப்பை பைனல் ஒட்டுமொத்தமாக 116 நிமிடத்தில் (ஒரு மணி நேரம், 56 நிமிடம்) முடிந்தது.
ரூ. 42 லட்சம் பரிசு
இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் அடிக்கடி மழை குறுக்கிட்டபோதும், மைதான பராமரிப்பாளர்கள் அசாத்தியமாக செயல்பட்டனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர், பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில்,‘ கொழும்பு, கண்டி மைதான பராமரிப்பாளர்கள், ஊழியர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் ரூ. 42 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்,’ என, தெரிவித்துள்ளார்.
* ஆட்ட நாயகன் விருதுடன், சிராஜ் ரூ. 4 லட்சம் பரிசுத்தொகை பெற்றார். இத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.
கனவு நனவானது
சிராஜ் கூறுகையில்,‘‘ஆசிய கோப்பை பைனலில் நான் 6 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது விதி. அது வெற்றிகரமாக நடந்துவிட்டது. இலங்கைக்கு எதிராக (ஜன. 15, 2023) திருவனந்தபுரத்தில் நடந்த லீக் போட்டியில் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தினேன். 5 விக்கெட் சாதனை கைகூடவில்லை. இம்முறை கனவு நனவானது,’’ என்றார்.
.....