பெல்கிரேடு: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் முதல் நாளில் களமிறங்கிய நான்கு இந்திய வீரர்களும் தோல்வியடைந்தனர்.
செர்பியாவின் பெல்கிரேடில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நேற்று துவங்கியது. பாரிஸ் ஒலிம்பிக் (2024) மல்யுத்தத்தின் 18 பிரிவுகளில் தலா 5 பேர் என மொத்தம் 90 பேர், இத்தொடரில் இருந்து தேர்வாக உள்ளனர். இந்தியா சார்பில் 30 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியுடன் பங்கேற்கின்றனர்.
நேற்று ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ போட்டிகள் நடந்தன. 70 கிலோ பிரிவு முதல் சுற்றில், 26வது இடத்திலுள்ள இந்திய வீரர் அபிமன்யு, உலகத் தரவரிசையில் 7வதாக உள்ள உக்ரைனின் இகோர் நிகிபோரக்கை 19–9 என வென்று ‘ஷாக்’ கொடுத்தார். அடுத்து மால்டோவாவின் நிகோலயை 13–2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இதில் அமெரிக்காவின் ஆலன் ரெதர்போர்டிடம் 2–9 என வீழ்ந்தார். மற்ற பிரிவுகளில் முதல் சுற்றில் வென்ற இந்திய வீரர்கள், ஆகாஷ் தாஹியா (61 கிலோ), சந்தீப் மான் (86 கிலோ), சுமித் (125 கிலோ), காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வீழ்ந்தனர்.