ரென்னெஸ்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் பைனலுக்கு இந்தியாவின் கலியாண்டா ஜோடி முன்னேறியது.
பிரான்சில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கலியாண்டா பூனாச்சா, பிரான்சின் அந்தோணி எஸ்கோபியர் ஜோடி, பிரான்சின் சாடியோ, பேபியன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை கலியாண்டா ஜோடி 7–5 என போராடி கைப்பற்றியது.
இரண்டாவது செட்டில் 2–6 என எளிதாக கோட்டை விட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி ‘சூப்பர் டை பிரேக்கருக்கு’ சென்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட கலியாண்டா ஜோடி 10–7 என வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 37 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் கலியாண்டா ஜோடி 7–5, 2–6, 10–7 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.