இந்திய டென்னிஸ் அரங்கில் புரட்சி ஏற்படுத்தியவர் லியாண்டர் பயஸ். 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிரேசிலின் பெர்ணான்டோ மெலிகெனியை வீழ்த்தினார். இதன்மூலம் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இவரது ஒலிம்பிக் பதக்க சாதனை 28 ஆண்டுகளாக நீடிக்கிறது
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் (17–07–1973) பிறந்தார் பயஸ். இவரது தந்தை வெசி பயஸ் சிறந்த ஹாக்கி வீரர். தாயார் ஜெனிபர் பயஸ், கூடைப்பந்து வீராங்கனை.
விம்பிள்டன் (1990), யு.எஸ்., ஓபன் (1991) கிராண்ட்ஸ்லாம் ஜூனியர் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்ற பயஸ், 1991ல் சீனியர் பிரிவில் அறிமுகமானார். பின் சகவீரர் மகேஷ் பூபதியுடன் இணைந்து இரட்டையரில் ஆதிக்கம் செலுத்தினார். கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் இரட்டையரில் 8, கலப்பு இரட்டையரில் 10 என, 18 பட்டங்களை தன்வசப்படுத்தினார். டேவிஸ் கோப்பை இரட்டையரில் அதிக வெற்றி (45) பெற்ற வீரர் என்ற சாதனை படைத்தார். ஏ.டி.பி., இரட்டையர் பிரிவில் 54 பட்டம் வென்றுள்ளார்.
சர்வதேச டென்னிசில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த பயசிற்கு, அர்ஜுனா (1990), கேல்ரத்னா (1996–97), பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷண் (2014) விருதுகள் வழங்கப்பட்டன. 2021ல் டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.