லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஒற்றையர் போட்டியில் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
டென்னிஸ் அரங்கின் உலக கோப்பை போன்றது ‘டேவிஸ் கோப்பை’ தொடர். இதன் ‘வேர்ல்டு குரூப் 2’ ல் இடம் பெற்ற இந்திய அணி, சொந்தமண்ணில் (லக்னோ) மொராக்கோ அணியை சந்திக்கிறது.
மழை காரணமாக நேற்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் தாமதமாகத் துவங்கின. முதல் போட்டியில் உலகத் தரவரிசையில் 365 வது இடத்திலுள்ள இந்திய வீரர் சசிக்குமார் முகுந்த், 557 வது இடத்திலுள்ள யாசின் திலிமியை எதிர்கொண்டார்.
‘டை பிரேக்கர்’ வரை நீண்ட முதல் செட்டை சசிக்குமார் 7–6 என வசப்படுத்தினார். இரண்டாவது செட்டில் துவக்கத்தில் 4–2 என முன்னணியில் இருந்த சசிக்குமார், கடைசியில் 5–7 என இழந்தார். மூன்றாவது செட்டில் 1–4 என பின்தங்கி இருந்த போது, காயத்தால் சசிக்குமார் விலக, மொராக்கோ வீரர் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், ஆடம் மவுண்டிர் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்ட சுமித் நாகல், 6–3, 6–3 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். தற்போது தொடர் 1–1 என சமனில் உள்ளது.
இன்று நடக்கும் இரட்டையர் போட்டியில் இந்திய ‘சீனியர்’ போபண்ணா, யூகி பாம்ப்ரி ஜோடி களமிறங்குகிறது. இது, டேவிஸ்கோப்பை அரங்கில் போபண்ணாவின் கடைசி போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.