லக்னோ: டேவிஸ் கோப்பை அரங்கில் தனது கடைசி போட்டியில் பங்கேற்கிறார் இந்தியாவின் போபண்ணா.
டென்னிஸ் அரங்கின் உலக கோப்பை போன்றது ‘டேவிஸ் கோப்பை’ தொடர். இதில் பெரும்பாலும் ‘வேர்ல்டு குரூப் 1’ல் பங்கேற்கும் இந்திய அணி, முதன் முறையாக ‘வேர்ல்டு குரூப் 2’ க்கு தள்ளப்பட்டது. இதில் இன்று மொராக்கோ அணியை சந்திக்கிறது.
இந்திய அணியில் உலகளவில் முன்னணி ஒற்றையர் வீரர்கள் இல்லாததால், எளிதான போட்டிகளையும் தோற்க நேரிடுகிறது. சுமித் நாகல் மட்டும் ஒற்றையர் தரவரிசையில் 156 வது இடத்தில் உள்ளார். ராம்குமார் ராமநாதன் (570 வது இடம்) பின் தங்கியதால், 365 வது இடத்திலுள்ள சசிக்குமார் முகுந்த் அணியில் சேர்க்கப்பட்டார்.
போபண்ணா நம்பிக்கை
இரட்டையரில் சீனியர் வீரர் போபண்ணா 43, கடந்த 2002 முதல் டேவிஸ் கோப்பை தொடரில் பங்கேற்கிறார். இதுவரை 32 போட்டியில் 10 ஒற்றையர் உட்பட 22ல் வெற்றி பெற்றுள்ளார். இம்முறை யூகி பாம்ப்ரியுடன் இணைந்து களமிறங்குகிறார். இத்தொடரில் போபண்ணா பங்கேற்கும் கடைசி போட்டி. தனது சொந்தமண்ணில் (கர்நாடகா) கடைசியாக பங்கேற்க விரும்பியது நடக்கவில்லை என்ற போதும், வெற்றியுடன் விடைபெறுவர் என நம்பலாம்.
மொராக்கோ அணியில் ஒற்றையரில் யாசின் திலிமி (557வது), ஆடம் மவுண்டிர் (779 வது) தரவரிசையில் பின்தங்கியுள்ளதால் இந்தியா எளிதாக வெற்றி பெற காத்திருக்கிறது.