புதுடில்லி: ஆசிய விளையாட்டில் பங்கேற்க சுனில் செத்ரி உள்ளிட்ட முன்னணி வீரர்களை அனுப்ப, ‘கிளப்’ அணிகள் மறுத்தன.
சீனாவின் ஹாங்சு நகரில் ஆசிய விளையாட்டு (செப். 23–அக்.8) நடக்கவுள்ளது. கால்பந்து போட்டிகள் செப். 19ல் துவங்குகின்றன. ஆசிய தரவரிசையில் 8வது இடத்திலுள்ள போதும், இந்திய கால்பந்து அணிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. தவிர, ஆசிய விளையாட்டு விதிப்படி கால்பந்து அணியில் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவர்.
விதிவிலக்காக மூன்று சீனியர் வீரர்களை அணியில் சேர்க்கலாம். இதன் படி, இந்திய அணி கேப்டனாக சுனில் செத்ரி, மத்திய கள வீரர் சந்தேஷ் ஜின்கன், அனுபவ கோல் கீப்பர் குர்பிரீத் சிங் அணியில் சேர்க்கப்பட்டனர்.
‘கிளப்’ உறுதி
இதனிடையே இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 10 வது சீசன், செப். 21ல் கொச்சியில் துவங்குகிறது. ஆசிய விளையாட்டு அணியில் இடம் பெற்ற வீரர்கள், பெங்களூரு (6), மும்பை (3), கோவா (3), மோகன் பகான் (3), ஒடிசா (2), கேரளா (2), சென்னை (1), பஞ்சாப் (1), ஐதராபாத் (1) அணிகளுக்கு விளையாடுகின்றனர்.
இவர்கள் ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதால், சுனில் செத்ரி, குர்பிரீத்சிங் சாந்து உள்ளிட்டோரை ஆசிய விளையாட்டுக்கு அனுப்ப முடியாது என பல்வேறு கிளப் அணி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. தவிர,‘ சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தொடரின் கீழ், ஆசிய விளையாட்டு வரவில்லை,’ என மறுப்பு தெரிவித்தன.
திரும்ப முடிவு
இதனால், அகில இந்திய கால்பந்து சங்கம், இந்திய விளையாட்டு ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில்,‘ ஒவ்வொரு அணியும் இரண்டு வீரர்களை அனுப்ப வேண்டும். பின் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் அனுமதி வாங்க வேண்டும்,’ என முடிவு செய்யப்பட்டது. போட்டி துவங்க 6 நாள் மட்டுமே உள்ளன. முடியாத பட்சத்தில் ஆசிய விளையாட்டில் இருந்து இந்திய அணியை திரும்ப பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.