நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் கோப்பை வென்றார். பைனலில் 6–3, 7–6, 6–3 என ரஷ்யாவின் மெத்வெடேவை தோற்கடித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் மோதினர். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 7–6 என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், மூன்றாவது செட்டை 6–3 என வென்றார்.
நான்காவது முறை: மூன்று மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 6–3, 7–6, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் 4வது முறையாக (2011, 2015, 2018, 2023) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த 2021ல் நடந்த யு.எஸ்., ஓபன் பைனலில் மெத்வெடேவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார் ஜோகோவிச்.
24வது பட்டம்: இது, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஜோகோவிச் கைப்பற்றிய 24வது பட்டம். இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 10 (2008, 2011–13, 2015–16, 2019–21, 2023), பிரெஞ்ச் ஓபனில் 3 (2016, 2021, 2023), விம்பிள்டனில் 7 (2011, 2014–15, 2018–19, 2021–22), யு.எஸ்., ஓபனில் 4 (2011, 2015, 2018, 2023) முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிக முறை பட்டம் வென்ற டென்னிஸ் நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரேட் கோர்ட் (24 பட்டம், ஆஸி., ஓபன்–11, பிரெஞ்ச் ஓபன்–5, விம்பிள்டன்–3, யு.எஸ்., ஓபன்–5) உடன் பகிர்ந்து கொண்டார்.
நான்கு முறை (2011, 2015, 2021, 2023), ஒரே சீசனில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரரானார் ஜோகோவிச். தவிர இவர், யு.எஸ்., ஓபனில் (‘ஓபன் எரா’) அதிக வயதில் (36 வயது) கோப்பை வென்ற வீரரானார்.
‘நம்பர்–1’
யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற செர்பியாவின் ஜோகோவிச், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2வது இடத்தில் இருந்து ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். அரையிறுதியோடு திரும்பிய ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரஷ்யாவின் மெத்வெடேவ், 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
* பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பெலாரசின் சபலென்கா, முதன்முறையாக ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். போலந்தின் ஸ்வியாடெக், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற அமெரிக்காவின் கோகோ காப், 6வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார்.
ரூ. 24.93 கோடி பரிசு
யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் கோப்பை வென்ற செர்பியாவினஜ் ஜோகோவிச், ரூ. 24.93 கோடி பரிசுத் தொகை பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த மெத்வெடேவுக்கு ரூ. 12.46 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.