கோவை: புச்சிபாபு கிரிக்கெட் பைனலில் ம.பி., அணி வலுவான முன்னிலை பெற்றது.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் பைனல் நடக்கிறது. இதில் ம.பி., அணி முதல் இன்னிங்ஸில் 370 ரன் குவித்தது. சுமித் குஷ்வா (114) சதம் அடித்தார். பின் முதல் இன்னிங்ஸை துவக்கிய டில்லி அணியின் சிவாங்க் வசிஸ்ட் (83) போராடினார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேற, டில்லி அணி 201 ரன்னுக்கு சுருண்டது. ம.பி.,யின் ராம்வீர் குர்ஜார் 4, குல்வந்த் கெஜ்ரோலியா 3 விக்கெட் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில், 169 ரன் முன்னிலை பெற்ற ம.பி., அணிக்கு துவக்க வீரர் அர்ஹாம் அகீல் (11) வந்த வேகத்தில் திரும்பினார். சுபம் சர்மா (33) சுமாராக விளையாடினார். மூன்றாம் நாள் முடிவில், ம.பி., அணி இரண்டாவது இன்னிங்சில் ஆறு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து, 298 ரன்கள் முன்னிலை பெற்றது. சுமித் குஷ்வா (11), ஆர்யன் தேஷ்முக் (17*) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லியின் சிவாங்க் வசிஸ்ட் 4 விக்கெட் கைப்பற்றினார்.