திம்பு: தெற்காசிய கால்பந்து (16 வயது) பைனலில் அசத்திய இளம் இந்திய அணி 2–0 என வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.
பூடானில், 16 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 8வது சீசன் நடந்தது. பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இந்தியாவின் பாரத் லைரெஞ்சம் ஒரு கோல் அடித்தார். இதற்கு, வங்கதேச வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்திய அணி 1–0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 74வது நிமிடத்தில் லெவிஸ் ஜாங்மின்லுன் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய வங்கதேச அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5வது முறையாக (2013, 2017, 2019, 2022, 2023) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் வங்கதேசம் (2015, 2018), பாகிஸ்தான் (2011) அணிகள் உள்ளன.