சியாங் மாய்: கிங்ஸ் கோப்பை கால்பந்து 3வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 0–1 என லெபனானிடம் வீழ்ந்தது.
தாய்லாந்தில், கிங்ஸ் கோப்பை கால்பந்து 49வது சீசன் நடந்து. இந்தியா, தாய்லாந்து, ஈராக், லெபனான் அணிகள் மோதின. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ‘பிபா’ உலக தரவரிசையில் 99வது இடத்தில் உள்ள இந்திய அணி, 100வது இடத்தில் உள்ள லெபனான் அணியை எதிர்கொண்டது.
முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 77வது நிமிடத்தில் லெபனான் வீரர் கோல் அடிக்க முயற்சித்த பந்தை இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, தலையால் முட்டி தள்ளிவிட்டார். அப்போது மைதானத்திற்குள் திரும்பி வந்த பந்தை லெபனானின் காசெம் எல் ஜீன் கோலாக மாற்றினார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0–1 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றியது. லெபனான் அணி வெண்கலம் வென்றது.