நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், முதன்முறையாக கோப்பை வென்றார். பைனலில் 2–6, 6–3, 6–2 என, பெலாரசின் சபலென்காவை வீழ்த்தினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரசின் அரினா சபலென்கா 25, அமெரிக்காவின் கோகோ காப் 19, மோதினர். முதல் செட்டை சபலென்கா 6–2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட கோகோ காப், இரண்டாவது செட்டை 6–3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய கோகோ காப் 6–2 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கோகோ காப் 2–6, 6–3, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் செரினா வில்லியம்சிற்கு (1999, 18 வயது) பின், சொந்த மண்ணில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ‘டீன் ஏஜ்’ அமெரிக்க வீராங்கனையானார் கோகோ காப் (19 வயது).
இத்தோல்வியின்மூலம் சபலென்கா, தனது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நழுவவிட்டார். ஏற்கனவே இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.
ரூ. 24.93 கோடி பரிசு
யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் கோப்பை வென்ற அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரூ. 24.93 கோடி பரிசுத் தொகை பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த சபலென்கா, ரூ. 12.46 கோடி பரிசுத் தொகை பெற்றார்.
‘நம்பர்–1’ இடம்
யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த பெலாரசின் சபலென்கா, இன்று வெளியாகும் டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறுகிறார். சாம்பியன் பட்டம் வென்ற கோகோ காப், 6வது இடத்தில் இருந்து முதன்முறையாக ‘நம்பர்–3’ இடத்தை கைப்பற்றுகிறார். போலந்தின் இகா ஸ்வியாடெக், முதலிடத்தில் இருந்து ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்படுகிறார்.