நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்யாவின் மெத்வெடேவ் முன்னேறினர். அரையிறுதியில் ஸ்பெயினின் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–2’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 47வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினர். இது, யு.எஸ்., ஓபனில் ஜோகோவிச் விளையாடிய 100வது போட்டியானது. இரண்டு மணி நேரம், 41 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6–3, 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
யு.எஸ்., ஓபனில் 10வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்ற ஜோகோவிச் 36, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 36வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். தவிர இவர், இந்த சீசனில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் பைனலுக்குள் நுழைந்தார். இப்படி இவர், ஒரு சீசனில், நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலில் விளையாடியது மூன்றாவது முறை. ஏற்கனவே 2015, 2021 சீசனில் இப்படி விளையாடி இருந்தார்.
அல்காரஸ் ஏமாற்றம்: மற்றொரு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 3வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் மோதினர். முதலிரண்டு செட்களை 6–7, 1–6 என இழந்த அல்காரஸ், 3வது செட்டை 6–3 எனக் கைப்பற்றினார். நான்காவது செட்டில் ஏமாற்றிய இவர், 3–6 எனக் கோட்டைவிட்டார்.
மூன்று மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 6–7, 1–6, 6–3, 3–6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள தவறினார். மெத்வெடேவ், யு.எஸ்., ஓபனில் 3வது முறையாக (2019, 2021, 2023) பைனலுக்குள் நுழைந்தார்.
பதிலடி வாய்ப்பு: பைனலில் ஜோகோவிச், மெத்வெடேவ் மோதுகின்றனர். கடந்த 2021ல் நடந்த யு.எஸ்., ஓபன் பைனலில் மெத்வெடேவ் 6–4, 6–4, 6–4 என ஜோகோவிச்சை வீழ்த்தினார். இத்தோல்விக்கு இன்று ஜோகோவிச் பதிலடி கொடுக்கும் பட்சத்தில், தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம். இதன்மூலம் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நட்சத்திரங்கள் வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரேட் கோர்ட்டுடன் (24 பட்டம்) பகிர்ந்து கொள்ளலாம்.