கோல்கட்டா: துாரந்த் கோப்பை கால்பந்தில் மோகன் பகான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 1–0 என, ஈஸ்ட் பெங்கால் அணியை வென்றது.
அசாம், மேற்கு வங்கத்தில், துாரந்த் கோப்பை கால்பந்து 132வது சீசன் நடந்தது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த பைனலில் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் எழுச்சி கண்ட மோகன் பகான் அணிக்கு 71வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடோஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். இதற்கு, ஈஸ்ட் பெங்கால் வீரர்களால் பதிலடி தர முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 23 ஆண்டுகளுக்கு பின் துாரந்த் கோப்பை வென்றது. கடைசியாக 2000ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தவிர, இத்தொடரில் 17வது முறையாக (1953, 59, 60, 63–65, 74, 77, 79–80, 82, 84–86, 94, 2000, 2023) கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கான வரிசையில் முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தில் ஈஸ்ட் பெங்கால் (16 முறை) உள்ளது.