சென்னை: இந்தியாவின் ‘நம்பர்–1’ செஸ் வீரரானார் குகேஷ்.
சர்வதேச செஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) அமைப்பு வெளியிடுகிறது. நேற்று புதிய பட்டியல் வெளியானது. இந்தியாவின் இளம் வீரர் குகேஷ் 17, சமீபத்தில் நடந்த உலக கோப்பை செஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் 3 இடம் முன்னேறிய இவர் முதன் முதலாக ‘டாப்–10’ பட்டியலுக்குள் நுழைந்தார்.
தவிர, ‘ஜாம்பவான்’ வீரர் ஆனந்தை ( 2754 புள்ளி, 9வது) முந்திய குகேஷ் 8வது (2758) இடம் பிடித்தார். இதையடுத்து 1986, ஜூலை 1 முதல், கடந்த 37 ஆண்டுகளாக இந்தியாவின் முதல்வனாக திகழ்ந்த ஆனந்தை பின்தள்ளிய குகேஷ், புதிய ‘நம்பர்–1’ வீரர் ஆனார்.
உலக கோப்பை பைனலில் விளையாடிய பிரக்ஞானந்தா (2727) 19வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் முதல் மூன்று இடத்தில் உள்ள குகேஷ், ஆனந்த், பிரக்ஞானந்தா என மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
தவிர விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (27), அர்ஜுன் எரிகைசி (29) என ‘டாப்–30’ பட்டியலில் ஐந்து இந்திய வீரர்கள் உள்ளனர். இந்தியாவின் மற்றொரு வீரர் ஹரிகிருஷ்ணா 31வது இடத்தில் உள்ளார்.
‘பிடே’ வெளியிட்ட செய்தியில்,‘ அதிகாரப்பூர்வமாக வெளியான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் குகேஷ், ஆனந்தை முந்தினார்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.