ஜூரிச்: டைமண்ட் லீக் தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில், டைமண்ட் லீக் தடகள போட்டி நடந்தது. இதன் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். சமீபத்தில் முடிந்த உலக தடகளத்தில் தங்கம் வென்ற இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. முதல் வாய்ப்பில் 80.79 மீ., எறிந்த இவர், அடுத்த இரு வாய்ப்புகளை ‘பவுல்’ செய்தார். நான்காவது வாய்ப்பில் 85.22 மீ., எறிந்த இவர், 5வது வாய்ப்பை வீணடித்தார். கடைசி வாய்ப்பில் 85.71 மீ., எறிந்தார்.
அதிகபட்சமாக 85.71 மீ., எறிந்த நீரஜ் சோப்ரா, 2வது இடத்தை உறுதி செய்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். செக்குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச் (85.86 மீ.,) தங்கம் வென்றார். மூன்றாவது இடத்தை ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (85.04 மீ.,) கைப்பற்றினார்.
நடப்பு டைமண்ட் லீக் சீசனில் நீரஜ் 3வது பதக்கம் கைப்பற்றினார். ஏற்கனவே தோகா (மே 5), லாசேனில் (ஜூன் 30) தங்கம் வென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 23 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இவர், செப். 16–17ல் அமெரிக்காவில் நடக்கவுள்ள டைமண்ட் லீக் பைனலுக்கு தொடர்ந்து 2வது முறையாக (2022, 2023) தகுதி பெற்றார்.
அடுத்த இலக்குநீரஜ் சோப்ரா கூறுகையில், ‘‘ஜூரிச் டைமண்ட் லீக் போட்டியில் எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில்(2024) எனது தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொள்வதே இலக்கு. இதற்கு கடினமாக உழைக்க வேண்டும். காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்,’’ என்றார்.
ஸ்ரீசங்கர் ஏமாற்றம்ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், அதிகபட்சமாக 7.99 மீ., தாண்டி 5வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 14 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இவர், டைமண்ட் லீக் பைனலுக்கான இடத்தை உறுதி செய்தார்.
தொடரும் தங்கம்சமீபத்தில் ஹங்கேரியில் நடந்த உலக தடகளத்தில் தங்கம் வென்ற நட்சத்திரங்கள், ஜூரிச் டைமண்ட் லீக் போட்டியிலும் தங்கம் வென்றனர். இதன் விபரம்
* ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (19.80 வினாடி), தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர், உலக தடகளத்தின் 100, 200, 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் தலா ஒரு தங்கம் வென்றிருந்தார்.
* பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் ஷா கேரி ரிச்சர்ட்சன் (10.88 வினாடி) தங்கம் வென்றார்.
* பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவின் டேனியல் வில்லியம்ஸ் (12.54 வினாடி) தங்கம் வென்றார்.
* பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் (12.82 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார்.
* பெண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ போட்டியில் வெனிசுலாவின் யுலிமர் ரோஜாஸ் (15.15 மீ.,) தங்கம் வென்றார்.
* ஆண்களுக்கான ‘போல்வால்ட்’ போட்டியில் சுவீடனின் ஆர்மண்ட் டுப்லாண்டிஸ் (6.00 மீ.,) தங்கத்தை தனதாக்கினார்.