கோல்கட்டா: துாரந்த் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. காலிறுதியில் 3–1 என, மும்பை சிட்டி அணியை வீழ்த்தியது.
அசாம், மேற்கு வங்கத்தில், துாரந்த் கோப்பை கால்பந்து 132வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த காலிறுதியில் மும்பை சிட்டி, மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் மோகன் பகான் அணியின் கம்மிங்ஸ் முதல் கோல் அடித்தார். இதற்கு, 28வது நிமிடத்தில் மும்பையின் பெரேரா தியாஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மோகன் பகான் அணிக்கு 30வது நிமிடத்தில் மன்விர் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 2–1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 63வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் அன்வர், தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய மும்பை அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 3–1 என வெற்றி பெற்றது.
கோல்கட்டாவில் நடக்கவுள்ள அரையிறுதியில் வடகிழக்கு யுனைடெட் – ஈஸ்ட் பெங்கால் (ஆக. 29), கோவா – மோகன் பகான் (ஆக. 30) அணிகள் மோதுகின்றன.