மென்டோசா: உலக கோப்பை கால்பந்தில் (20 வயது) பிரேசில் அணி 6–0 என்ற கோல் கணக்கில் டொமினிகன் குடியரசு அணியை வீழ்த்தியது.
அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. மென்டோசாவில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி டொமினிகன் குடியரசு அணியை சந்தித்தது. 37வது நிமிடத்தில் சாவியோ கோல் அடித்து பிரேசில் கணக்கை துவக்கி வைத்தார். அடுத்த நிமிடத்தில் சக வீரர் மார்கஸ் கைகொடுத்தார். முதல் பாதியில் பெற்ற முன்னிலையை பிரேசில் தக்கவைத்தது. இதன்பின், பிரேசிலின் பெட்ராசோ (57), ஜியாவனே (82), மார்லோன் (90+2), மாத்யூஸ் (90+3) தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். முடிவில், பிரேசில் 6–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நைஜீரியா முன்னேற்றம்
இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் நைஜீரியா அணி 2–0 என இத்தாலியை வீழ்த்தியது. முதல் லீக் போட்டியில் ஏற்கனவே வென்றிருந்த நைஜீரியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
லா பிளாட்டாவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் கொலம்பியா அணி 2–1 என்ற கணக்கில் ஜப்பானை சாய்த்தது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது வெற்றியுடன் கொலம்பியா ‘நாக் அவுட்’ சுற்றுக்குள் நுழைந்தது.
* இதே பிரிவில் செனகல், இஸ்ரேல் அணிகள் மோதிய மற்றொரு லீக் போட்டி 1–1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.