ஆமதாபாத்: பிரிமியர் லீக் தகுதிச்சுற்று 2ல் இன்று குஜராத், மும்பை அணிகள் மோதுகின்றன. திடீர் எழுச்சி பெற்றுள்ள மும்பை அணியை சமாளித்து மீண்டும் பைனலுக்கு செல்லுமா குஜராத் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் பிரிமியர் லீக் தொடரின் 16வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு முறை சாம்பியன் சென்னை அணி, ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது.
இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி, ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணியை எதிர்கொள்கிறது.
திடீர் எழுச்சி
மும்பை அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (324 ரன்), இஷான் கிஷான் (454), சூர்யகுமார் (544), கேமரான் கிரீன் (422), டிம் டேவிட் (229) என பலரும் முதுகெலும்பாக திகழ்கின்றனர். பின் வரிசையில் ‘இம்பாக்ட்’ வீரராக வரும் வதேராவின் (237) மின்னல் வேக ரன் குவிப்பு பெரும் பலமாக உள்ளது.
மத்வால் பலம்
பும்ரா, ஆர்ச்சர் இல்லாத நிலையில் அணியின் பவுலிங்கில் ஆகாஷ் மத்வால் (7 போட்டி, 13 விக்.,) எழுச்சி நாயகனாக உள்ளார். லக்னோ அணிக்கு எதிரான ‘எலிமினேட்டர்’ போட்டியில் 5 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இது இன்றும் தொடரலாம். சுழலில் அனுபவ பியுஸ் சாவ்லா (15 போட்டி, 21 விக்.,), பெஹ்ரன்டர்ப் (14 விக்.,) பலம் சேர்க்கின்றனர்.
பாண்ட்யா கையில்...
தகுதிச்சுற்று 1ல் குஜராத் அணி தோற்றாலும் இன்று சொந்தமண்ணில் களமிறங்குவது உற்சாகம் தரும். 15 போட்டியில் 722 ரன் குவித்துள்ள (சராசரி 55.33) சுப்மன் கில், 12 போட்டியில் 301 ரன் எடுத்த விஜய் சங்கர், சகா (299) பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இதுவரை 297 ரன் எடுத்திருந்தாலும், கடைசியாக களமிறங்கிய 4 இன்னிங்சில் (8, 8, 4, 25) பெரியளவு ரன் எடுக்கவில்லை. டேவிட் மில்லரும் (259) இந்த சீசனில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
மிரட்டுவாரா ஷமி
வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி (15ல் 26 விக்.,), மோகித் சர்மா (19), நுார் அகமது (14) மும்பை வீரர்களுக்கு தொல்லை தருவாரா என இன்று தெரியும். சுழலில் 25 விக்கெட் சாய்த்த ரஷித் கான் இருப்பது பலம்.