புதுடில்லி: ஆசிய கோப்பை தொடர் குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில் வரும் செப்டம்பர் 2–17ல் ஆசிய கோப்பை தொடரின் 16வது சீசன் பாகிஸ்தானில் நடக்க உள்ளது. ஆனால் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் செல்லவில்லை. இம்முறையும் அரசின் அனுமதி இல்லாமல் பாகிஸ்தான் செல்ல முடியாது என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ஆலோசனை தெரிவித்தது. இதை இந்தியா ஏற்க மறுத்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா கூறியது:
ஆசிய கோப்பை தொடரை எங்கு நடத்துவது என இதுவரை முடிவு எடுக்கவில்லை. தற்போது நாங்கள் பிரிமியர் தொடரில் ‘பிசியாக’ உள்ளோம். தவிர இத்தொடரின் பைனலைக் காண இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுகளின் பிரதிநிதிகள் ஆமதாபாத் வரவுள்ளனர். அப்போது ஆசிய கோப்பை தொடர் நடத்தும் இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.