சலாலா: ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் நேற்று இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது
ஓமன் நாட்டின் சலாலா நகரில் ஆசிய கோப்பை ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஹாக்கி தொடர் நடக்கிறது. 10 அணிகள் இரு பிரிவாக பங்கேற்கின்றன. தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் அணிகள் உலக கோப்பைக்கு (2023, டிச.5–16, கோலாலம்பூர்) நேரடியாக தகுதி பெறும். ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி ஜப்பான், பாகிஸ்தான், சீன தைபே, தாய்லாந்து அணிகளுடன் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் சீன தைபேவை (18–0) வீழ்த்தியது.
தனது இரண்டாவது போட்டியில் ஜப்பான் அணியை சந்தித்தது. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினாலும் இந்திய தரப்பில் சரியான ‘பினிஷிங்’ இல்லை. வாய்ப்பை பயன்படுத்திய ஜப்பான் அணிக்கு 19வது நிமிடத்தில் யூசுடா கெம்பெய் முதல் கோல் அடித்தார்.
முதல் பாதியில் இந்திய அணி 0–1 என பின்தங்கியது. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
போட்டியின் 36 வது நிமிடத்தில் இந்திய வீரர் அராய்ஜீத் சிங், ஒரு ‘பீல்டு’ கோல் அடித்தார். அடுத்த மூன்றாவது நிமிடம் இந்தியாவுக்கு ‘பெனால்டி கார்னர்’ கிடைத்தது. இதை ஸ்ரதா நந்த் கோலாக மாற்றினார். 56 வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் உத்தம் சிங், ‘பீல்டு’ கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.