லண்டன்: மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவி போபரா 49 பந்தில் 144 ரன் குவித்தார். ஒரே ஓவரில் 38 ரன் விளாசினார்.
இங்கிலாந்தில் ‘டி–20’ பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் மிடில்சக்ஸ், சசக்ஸ் லெவன் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய சசக்ஸ் அணிக்கு கிளார்க் (30), அல்சோப் (55), கார்டன் (53) சற்று கைகொடுத்தனர். பேட்டிங்கில் மிரட்டிய 38 வயதான கேப்டன் ரவி போபரா, ரன் மழை பொழிந்தார். டி கெய்ர் வீசிய 16வது ஓவரில் முதல் 3 பந்தில் 4, 6, 6 என ரன் விளாசினார்.
அடுத்த பந்து ‘நோ பாலாக’ 2+4 (பைஸ்) ரன் கிடைத்தன. கடைசி 3 பந்தில் 6, 4, 6 ரன் எடுக்க, ஒரே ஓவரில் மொத்தம் 38 ரன் குவித்தார் போபாரா.
இவர் 49 பந்தில் 12 சிக்சர், 14 பவுண்டரி உட்பட 144 ரன் குவித்து மிரட்டினார். சசக்ஸ் அணி 20 ஓவரில் 324/7 ரன் குவித்தது. பின் களமிறங்கிய மிடில்சக்ஸ் அணி 15 ஓவரில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 194 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.