சென்னை: ‘‘ஓய்வு குறித்து முடிவு எடுக்க 8 முதல் 9 மாதம் வரை அவகாசம் உள்ளது,’’என தோனி தெரிவித்தார்.
பிரிமியர் தொடரின் தகுதிச்சுற்று 1 சென்னையில் நடந்தது. இதில் தோனியின் சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி, 10 வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இத்தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.
இப்போட்டிக்கு பின் தோனி அளித்த பேட்டி:
எனது ஓய்வு குறித்து அனைவரும் கேட்கின்றனர். முடிவெடுக்க இன்னும் 8 முதல் 9 மாதம் வரை அவகாசம் உள்ளது. அதற்குள் ஓய்வு குறித்து சிந்தித்து ஏன் தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றபடி சென்னை அணியோடு தான் எப்போதும் நான் இருப்பேன். வீரராக களத்தில் விளையாடினாலும் சரி, விளையாடாமல் ‘பெஞ்ச்சில்’ உட்கார்ந்து இருந்தாலும் சரி, எப்போதும் எனக்கு சென்னை மட்டும் தான்.
கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக கடினமாக உழைத்தோம். இதற்கான பரிசு தான் தற்போதைய ‘பைனல்’. இதில் அனைத்து வீரர்களுக்கும் பங்கு உள்ளது.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் ஜடேஜாவுக்கு கைகொடுத்தது. இவரது பந்துவீச்சு போட்டியின் முடிவை மாற்றியது. தவிர மொயீன் அலியுடன் இணைந்து இவர் எடுத்த ரன்களையும் மறக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘தொல்லை’ கேப்டன்
தோனி கூறுகையில்,‘‘ஒவ்வொரு பந்துக்கும் ஒருமுறை பீல்டர்களையும், அடிக்கடி பவுலர்களையும் மாற்றிக் கொண்டு இருந்தேன். இது அவர்களுக்கு தொல்லையாகத் இருக்கும். பீல்டர்கள் எப்போதும் என்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பேன்,’’ என்றார்.
அவரது ‘ஸ்டைலே’ தனி
குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்,‘‘சென்னை அணிக்கு எதிராக 15 ரன் கூடுதலாக கொடுத்து விட்டதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் தோனியின் மனதில் நினைக்கும் திட்டங்கள், பவுலர்களை அவர் பயன்படுத்தும் அழகு உள்ளிட்டவைகளை பார்க்கும் போது, ஒட்டுமொத்தமாக அவரது அணி, இன்னும் கூடுதலாக 10 ரன் எடுத்து விட்டது போன்ற உணர்வை எதிரணி பேட்டர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறார். தொடர்ந்து பவுலர்களை மாற்றியதால் விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது. பைனலில் மீண்டும் தோனியை சந்தித்தால் நன்றாக இருக்கும்,’’ என்றார்.
தடை வருமா
சென்னை அணி பவுலர் பதிரானா, நேற்று தனது முதல் ஓவரை வீசிய பிறகு மைதானத்தை விட்டு வெளியே சென்றார். 9 நிமிடத்துக்குப பின் தான் மீண்டும் வந்தார். விதிப்படி மீண்டும் 9 நிமிடம் மைதானத்தில் இருந்த பிறகு தான் இவர் பவுலிங் செய்ய முடியும்.
உடனடியாக பதிரானா பந்துவீச அம்பயர்கள் மறுத்தனர். இதுகுறித்து சுமார் 4 நிமிடம் தோனி பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருவழியாக தோனி கோரிக்கை ஏற்பட, பதிரானா பந்து வீசினார்.
இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக நிர்ணயித்த நேரத்துக்குள் சென்னை அணி பந்துவீச முடியவில்லை. தோனியின் செயல்குறித்து அம்பயர்கள் புகார் தெரிவித்தால், அபராதம் விதிக்கப்படலாம். இத்தொடரில் முதன் முறை என்பதால் பைனலில் பங்கேற்க தடை வராது. ஒருவேளை விதிகளை மீறியதால் தோனிக்கு தடை விதிக்கப்பட்டால், பைனலில் விளையாட முடியாது.