பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மே 28ல் துவங்குகிறது. இதற்கான தகுதிச் சுற்று நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரான்சின் எமிலின் டார்ட்ரான் மோதினர். இரண்டு மணி நேரம், 48 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அன்கிதா 7–5, 5–7, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது போட்டியில் அன்கிதா, ஜப்பானின் மோயுகா உச்சிஜிமா மோதினர். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 6–7 என இழந்த அன்கிதா, இரண்டாவது செட்டை 1–6 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 46 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய அன்கிதா 6–7, 1–6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து, பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.