சான்டியாகோ டெல் எஸ்டிரோ: உலக கோப்பை கால்பந்து (20 வயது) ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது.
அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, பிரேசில், இத்தாலி, நியூசிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. சான்டியாகோ டெல் எஸ்டிரோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, கவுதமாலா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா சார்பில் வெலிஸ் (17வது நிமிடம்), ரோமிரோ (65வது), பெரோன் (90+8வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஏற்கனவே உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய அர்ஜென்டினா அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து ‘நாக்–அவுட்’ சுற்றுக்குள் நுழைந்தது.
மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2–2 என ‘டிரா’ ஆனது.
அமெரிக்கா அசத்தல்: சான் ஜுவானில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, பிஜி அணிகள் மோதின. இதில் அசத்திய அமெரிக்க அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஈகுவடாரை வென்ற அமெரிக்க அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஈகுவடார் அணி 2–1 என சுலோவாகியா அணியை வென்றது.