புதுடில்லி: ‘‘ உலக டெஸ்ட் பைனலுக்கான அணியில் அஷ்வின், ஜடேஜா இடம் பெற வேண்டும்,’’ என ரவி சாஸ்திரி தெரிவித்து உள்ளார்.
ஐ.சி.சி., சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்(ஜூன் 7–11) லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதற்கான 11 பேர் கொண்ட இந்திய அணி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:
இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடியது. ஏனெனில் இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் என நான்கு ‘வேகங்களுடன்’ வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஷர்துல் தாகூர் அணியில் இடம் பெற்றிருந்தனர். இதனால் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
இம்முறை அனைத்து விஷயங்களையும் பரிசீலித்து, சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை பவுலர்களுக்கு வயதாகி விட்டது, வேகமாக பந்து வீச மாட்டர் என நினைத்தால், அவர்கள் ‘பார்ம்’ மீது லேசான சந்தேகம் இருந்தாலும் சரி, இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் முடிவுக்கு வரலாம். ஏனெனில் ஜடேஜாவைப் போல அஷ்வினும் தரமான பவுலர் தான்.
எது சரி
ஒருவேளை ஆடுகளம் காய்ந்து, கடினமாக இருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது தான் சரியாக இருக்கும். இங்கிலாந்து சூழல் குறித்தும் யோசிக்க வேண்டும். இப்போது அங்கு வெயில் அடிப்பதாக நம்புகிறேன். இரு ‘சுழல்’, இரு ‘வேகம்’ ஒரு ‘ஆல் ரவுண்டருடன்’ ஐந்து பேட்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் என களமிறங்குவது தான் இந்தியாவுக்கு நல்லது.
பேட்டிங்கில் ரோகித்–சுப்மன் கில் கூட்டணி துவக்கம் தரலாம். ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, கோஹ்லி, ரகானே, விக்கெட் கீப்பராக பரத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட்டுடன் ‘ஆல் ரவுண்டர்’ கேமரான் கிரீன், ‘சுழலில்’ லியான் இடம் பெறுவர்.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.
‘லெவன்’ அணி
ரவி சாஸ்திரி கணித்துள்ள களமிறங்கும் இந்திய ‘லெவன்’ அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, கோஹ்லி, ரகானே, ஜடேஜா, பரத், ஷர்துல் தாகூர், அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.