பாரிஸ்: ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஸ்பெயினின் அல்காரஸ், மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றினார்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டுள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 2வது இடத்தில் இருந்து மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். இதற்கு முன், கடந்த செப்டம்பரில் யு.எஸ்., கோப்பை வென்ற போது முதலிடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார். இத்தொடரில் 4வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச், முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ரிபாகினா ‘நம்பர்–4’
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அடுத்த இரு இடங்களில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா நீடிக்கின்றனர். இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, 6வது இடத்தில் இருந்து ‘நம்பர்–4’ இடத்துக்கு முன்னேறினார். இதனையடுத்து பிரான்சின் கரோலினா கார்சியா, அமெரிக்காவின் கோகோ காப் முறையே 5, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.