மென்டோசா: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து (20 வயது) லீக் போட்டியில் தென் கொரிய அணி 2–1 என, பிரான்சை வீழ்த்தியது.
அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, பிரேசில், இத்தாலி, நியூசிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. மென்டோசாவில் நடந்த ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ், தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் தென் கொரியாவின் லீ செயுங்–வோன், ஒரு கோல் அடித்தார். இதற்கு பிரான்ஸ் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் தென் கொரிய அணி 1–0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய தென் கொரிய அணிக்கு 64வது நிமிடத்தில் லீ யங்–ஜுன் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய பிரான்ஸ் அணிக்கு 70வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் விர்ஜினியஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் தென் கொரிய அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
மற்றொரு ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் ஹோண்டுரஸ், காம்பியா அணிகள் மோதின. இதில் காம்பியா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து வெற்றி
லா பிளாட்டாவில் நடந்த ‘இ’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, துனிசியா அணிகள் மோதின. இதில் ஸ்கார்லட் (25வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ‘இ’ பிரிவு போட்டியில் உருகுவே, ஈராக் அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த உருகுவே அணி 4–0 என வென்றது.