மான்செஸ்டர்: பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி கோப்பை வென்றது.
இங்கிலாந்தில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்ற பிரிமியர் லீக் கால்பந்து 31வது சீசன் நடந்தது. மான்செஸ்டரில் நடந்த கடைசி லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, செல்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ஜூலியன் ஆல்வரஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய செல்சி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
லீக் சுற்றின் முடிவில் 36 போட்டியில், 28 வெற்றி, 4 ‘டிரா’ 4 தோல்வி என, 88 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த அணி, 7வது முறையாக பிரிமியர் லீக் கோப்பை வென்றது. இதற்கு முன் 2011–12, 2013–14, 2017–18, 2018–19, 2020–21, 2021–22ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தவிர, அதிக முறை பிரிமியர் லீக் கோப்பை வென்ற அணிகளுக்கான வரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி (13 முறை) உள்ளது.
இம்முறை, அடுத்த நான்கு இடங்களை முறையே ஆர்சனல் (81 புள்ளி), நியூகேசில் யுனைடெட் (69), மான்செஸ்டர் யுனைடெட் (69), லிவர்பூல் (66) அணிகள் கைப்பற்றின.